சராசரி மனிதனின் எண்ணம்
யார் ஒருவர் ஓய்வே இல்லாமல் வேலையில் ஈடுபடுகிறாரோ அவரே நல்லபடியாக தொழில் செய்கிறார், அப்படி வேலை செய்யவில்லை எனில் அவர் வெற்றியடைய முடியாது. தற்போது இருக்கக்கூடிய பெரும்பாலான சிறிய தொழில் செய்திடும் முதலாளிகளின் எண்ணம் இப்படித்தான் இருக்கிறது. அதற்காகத்தான் வியாபாரமே நடக்கவில்லை என்றாலும் கூட கடையில் எதையாவது செய்திகொண்டிருக்கும் முதலாளிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
உதாரணத்திற்கு, ஒரு தச்சர் இருக்கிறார், அவருக்கு தச்சு தொழிலில் மிகச்சிறந்த அனுபவம் இருக்கிறது, அதேபோல அவர் மீது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையும் இருக்கிறது, நல்ல வாடிக்கையாளர்களும் அவருக்கு இருக்கிறார்கள்.
இந்தப்பெயரை காப்பாற்றிக்கொள்ள அவர் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் கூட அயராது உழைத்து வருகிறார். அவர் இன்னும் கூடுதலான நபர்களை வேலைக்கு அமர்த்தினால் அவர் இவ்வளவு நேரம் வேலை செய்யவேண்டிய அவசியம் இருக்காது மேலும் கூடுதலான ஆர்டர்களையும் அவரால் பெற முடியும். மேலும் சொன்ன நேரத்திற்கு முன்னாலேயே வேலையை முடித்துக்கொடுக்க முடியும். பல வருடங்களாக வேலை பார்த்து வந்தாலும் கூட அவர் கூடுதலாக 2 ஆட்களை நியமிப்பதை பற்றி சிந்திக்கவே இல்லை. காரணம், வேலை பார்க்கத்தான் நாம் இருக்கிறோமே பிறகு எதற்கு வேறு இருவர், அவர்களுக்கு வேறு சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்கள் சரியாக வேலையை செய்யாவிட்டால் பிரச்சனை வேற வந்துவிடும்.
இப்படிப்பட்ட சந்தேகங்களால் அவரால் ஒரு நிலைக்கு மேல் உயர முடியவில்லை. ஆனால் அவருடைய தொழில் எப்போதும் போல பிரச்சினையில்லாமல் சென்றுகொண்டு தான் இருந்தது.
நம்பிக்கையோடு பெரிதாக சிந்திக்கலாம்
தச்சரின் நம்பர் ஒருவர் தச்சரிடம் இதுபற்றி பேசுகிறார். அவர் எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏற்படவே இல்லை, நண்பரும் விடுவதாக இல்லை. இறுதியில் ஒரு முடிவு எட்டப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் சோதனை முறையில் நண்பர் சொன்ன ஆலோசனையை செய்து பார்ப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
நல்ல திறமையான இரண்டு தச்சர்கள் பணிக்கு எடுக்கப்பட்டார்கள். அவர்களிடம் இவரின் திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகள் நீங்கள் சரியாக உழைத்தால் உங்களின் பணி என்னிடமே தொடரும். எனக்கு கிடைக்கும் வருமானம் உயரும் போதெல்லாம் உங்களுக்கும் அதன் பலன் கிடைக்கும் என்ற வாக்குறுதியோடு சோதனை முயற்சி துவங்கியது. தலைமை தச்சர் தற்போது இரண்டு மூன்று மணி நேரம் கடையில் இருந்து கொண்டு வேலை சரியாக நடக்கிறதா என பார்த்துக்கொண்டார், அதேபோல வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் போது தானே நேரடியாக இருந்து செய்வித்த பொருள்களை ஒப்படைத்தார்.
மீதமிருக்கும் நேரங்களில் பல இடங்களுக்கு சென்று புதிய புதிய ஒப்பந்தங்களை பிடித்துக்கொண்டு வர தொழில் நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்தது. இப்போது ஓராண்டுகள் முடிவதற்கு முன்னாலேயே இன்னும் கூடுதலாக வேலை ஆட்கள் இணைக்கப்பட்டார்கள். தொழில் வளர்ச்சி அடைய லாபமும் கூடியது. வாக்குறுதி கொடுத்தபடியே பணியாட்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டது. தானே முழு நேரமும் உழைத்து ஈட்டிய வருமானத்தை விடவும் பணியாட்களை வைத்துக்கொண்டு நிறைய வேலைகளை எடுத்து செய்தபடியால் வந்த வருமானம் அதிகமாகவே இருந்தது.
யார் நீங்கள்? பில்கேட்ஸா சாதாரண முதலாளியா?
நான் பிறரை நம்ப மாட்டேன், நானே முழு நேரமும வேலை பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் தான் எனக்கு மனநிறைவு என நீங்கள் நினைத்தால் ஒரு நிம்மதியான வாழ்க்கையை நடத்தும் சிறு முதலாளியாக இருந்துவிட்டு போகலாம். ஆனால் நீங்கள் பில்கேட்ஸ் போன்று மிகப்பெரிய தொழில் அதிபராக மாற வேண்டும் என்றால் பிறரை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். வேலை செய்திடும் நபராக அல்லாமல் மேலாண்மை செய்யும் நபராகவும் நீங்கள் மாறவேண்டும்.
இரண்டும் உங்கள் மனதில் தான் இருக்கிறது. மிகப்பெரிய சிகரத்தை நோக்கி ஒரு சிறிய அடியை எடுத்து வையுங்கள். வெற்றி நிச்சயம்.
தொகுப்பு
வீ. குகதாசன்
No comments:
Post a Comment