சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் 1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை இலங்கை அரசானது 1991 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது. இந்தச் சமவாயம் சிறுவர்கள் சிறப்பான மதிப்புக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குரிய நன்மைகள், அவர்கள் பெறவேண்டிய பாதுகாப்பு ஆகியவற்றை வரை முறைப்படுத்து கின்றது. இச்சமவாயத்தில் 54 உறுப்புரைகள் காணப்படுகின்றன. இதில் முக்கியமான 42 உறுப்புரைகளின் சாராம்சம் பின்வருமாறு:
• உறுப்புரை 1 - சிறுவர் பற்றிய வரைவிலக்கணம்
18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரும் சிறுவர், சிறுமியர் ஆகக் கணிக்கப்படுவர். அவர் இந்த சமவாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா உரிமைகளையும் அனுபவித்தல் வேண்டும்.
• உறுப்புரை 2 - பாகுபாடு காட்டாமை
எல்லா உரிமைகளும் வயது, பால், ஆற்றல், நிறம், இனம், மொழி அல்லது சமயம் என்பன எவ்வாறிருப்பினும் எல்லாச் சிறுவர் சிறுமியருக்கும் உரியன. சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்து காப்பதும் அவர்களின் உரிமைகளைப் பரப்ப ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.
• உறுப்புரை 3 - சிறுவரின் உயரிய நலன்கள்
சிறுவர் தொடர்பான சகல நடவடிக்கைகளும் முடிவுகளும் அவர்களின் உயரிய நலன்களை முழுமையாக கருத்தில் கொள்ள வேண்டும்.
• உறுப்புரை 4 - சமவாயத்தை நடைமுறைப்படுத்துதல்
சமவாயத்தில் அடங்கியுள்ள உரிமைகளை நிதர்சனமாக்குவதற்கு அரசாங்கம் தன்னாலான அனைத்தையும் செய்தல் வேண்டும்.
• உறுப்புரை 5 - பெற்றோரின் வழிநடத்துதலும் குழந்தையின் வளர்ச்சியும்
குழந்தைக்கு அதன் பரினாம வளர்ச்சிக்கு இசைவான முறையில் வழிகாட்டும் பொறுப்பு பெற்றோருக்கும், குடும்பவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் உண்டென்பதை அரசாங்கம் மதித்தல் வேண்டும்.
• உறுப்புரை 6 - உய்வும் மேம்பாடும்
ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர்வாழும் உரிமை பிறப்போடு கூடியதொன் றென்பதை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் உய்வையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும் கடப்பாடு அரசாங்கத்தினுடையதாகும்.
• உறுப்புரை 7 - பெயரும் நாட்டினமும்
ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததும் ஒருபெயரைப் பெறும் உரிமையுடையதாகும். அத்துடன் ஒரு நாட்டினத்தைச் சார்வதற்கும், தன் பெற்றோர் இன்னாரென்று அறிவதற்கும், அவர்களால் பராமரிக்கப்படுவதற்கும் அது உரிமையுடையதாகும்.
• உறுப்புரை 8 - தனித்துவத்தைப் பேணல்
குழந்தையின் தனித்துவ அடையாளத்தைப் பேணுவதும், அவசியம் ஏற்பட்டால் அதன் அடிப்படை அம்சங்களை மீள நிலைநாட்டுவதும் அரசின் கடமையாகும். இதில் குழந்தையின் பெயர், இனம், குடும்ப சொந்தங்கள் என்பன அடங்கும்.
• உறுப்புரை 9 - பெற்றோரைப் பிரிதல்
(இம்சை, புறக் கணிப்பு முதலியன காரணமாக) குழந்தையின் நலனுக்கு அவசியம் என்று கருதப்பட்டாலன்றி, மற்றும்படி தன் பெற்றோருடன் வாழும் உரிமை குழந்தைக்கு உண்டு. தாய் அல்லது தந்தையரிடமிருந்து பிரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் இருவருடனும் உறவைப் பேணும் உரிமை பிள்ளைக்கு உண்டு.
• உறுப்புரை 10 - குடும்பம் மீளச் சேருதல்
குடும்பத்தவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளும் பொருட்டோ, பெற்றோர் பிள்ளை உறவைப் பேணும் பொருட்டோ, வேறு ஒருநாட்டை விட்டு வெளியேறி தமது நாட்டினுள் நுழையும் உரிமை பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உண்டு.
• உறுப்புரை 11 - சட்டவிரோத இடமாற்றமும் மீளாமையும்
பெற்றோரோ மூன்றாம் தரப்பினரோ சிறுவர்களைக் கடத்துதலை அல்லது மறித்து வைத்தலைக் தடுப்பதும் நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.
• உறுப்புரை 12 - சிறுவரின் கருத்து
தனது கருத்தைத் தெரிவிக்கும் சுதந்திரம் பிள்ளைக்கு உண்டு. பிள்ளையைப் பாதிக்கும் எந்த விடயத்திலும் அதன் கருத்தைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
• உறுப்புரை 13 - கருத்துச் சுதந்திரம்
பிறரின் உரிமைகளை மீறினாலன்றி மற்றும்படி தனது எண்ணங்களைத் தங்கு தடையின்றி வெளியிடவும் தகவல்கள் பெறவும், தன்கருத்தை அல்லது தகவலைத் தெரியப்படுத்தவும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமை உண்டு.
• உறுப்புரை 14 - சிந்தனை, மனச்சாட்சி, மதச் சுதந்திரம்
பெற்றோரின் முறையான வழி நடத்தலுக்கும் தேசிய சட்டத்துக்கும் அமைய, சிந்தனைச் சுநத்திரம் மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமை உண்டு.
• உறுப்புரை 15 - கூடும் சுதந்திரம்
பிறரின் உரிமைகளை மீறினாலன்றி மற்றும்படி பிறருடன் சேர்வதற்கும் சங்கங்கள் அமைத்தல், அல்லது அவற்றில் அங்கம் பெறுவதற்கும் சிறுவருக்கு உரிமை உண்டு.
• உறுப்புரை 16 - அந்தரங்கத்தைக் காத்தல்
பிள்ளைகளுக்குத் தங்களது அந்தரங்கத்தைப் பேணும் உரிமை உண்டு. தமது அந்தரங்கம், குடும்பம், வீடு, கடிதத்தொடர்பு ஆகியவற்றில் பிறர் தலையிடாதிருக்கும் உரிமை சிறுவர்களுக்கு உண்டு.
• உறுப்புரை 17 - தகுந்த தகவல்கள் கிடைக்க வழி செய்தல்
வெகுசன ஊடகங்களின் முக்கியத்தை அரசாங்கம் அங்கீகரித்தல் வேண்டும். அத்துடன் பிள்ளை உள்ளுர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு தகவல்களையும் தகவற் சாதனங்களையும், குறிப்பாக அதன் சேமநலனை மேம்படுத்தும் சாதனங்களையும், பெறுவதற்கான வாய்ப்புகளையும் அளித்தல் வேண்டும். இதுவிடயத்தில் பிள்ளையின் கலாசாரப் பின்னணிக்கு மதிப்பளித்தல் வேண்டும்.
• உறுப்புரை 18 - பெற்றோர் பொறுப்பு
பிள்ளையை வளர்க்கும் முக்கிய பொறுப்பு தாய், தந்தை ஆகிய இருவரையும் சார்ந்ததாகும். அரசாங்கம் இது விடயத்தில் அவர்களுக்கு ஆதரவு அளித்தல் வேண்டும். பிள்ளைகளை வளர்ப்பதில் அரசாங்கம் பெற்றோருக்குத் தகுந்த உதவி வழங்குதல் வேண்டும்.
• உறுப்புரை 19 - இம்சை, புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு
சகல வகையான இம்சைகள் புறக்கணிப்பிலிருந்தும் பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. பிள்ளைகளைத் துன்புறுத்த பெற்றோருக்கோ பிற பராமரிப்பாளர்களுக்கோ உரிமை இல்லை. இது தொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரசினுடையதாகும்.
• உறுப்புரை 20 - குடும்பப் பிணைப்பற்ற பிள்ளையைப் பாதுகாத்தல்
குடும்பச் சூழலற்று வாழும் பிள்ளை விசேட பாதுகாப்புப் பெறும் உரிமை உடையதாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தகுந்த மாற்றுக் குடும்பப் பராமரிப்பினை அளிப்பதும் அல்லது பராமரிப்பு நிலையமொன்றில் இடம்தேடிக் கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்ற முயலும் போது பிள்ளையின் கலாசாரப் பின்னணியைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
• உறுப்புரை 21 - சுவீகாரம்
பிள்ளையின் நலனை முன்னிட்டே அது மேற்கொள்ளப்படல் வேண்டும். அப்போது கூட, சட்டத்துக்கு அமைவாக அது நிறைவேற்றப்படல் வேண்டும்.
• உறுப்புரை 22 - அகதிச் சிறுவர்கள்
ஒரு சிறுவன் அல்லது சிறுமி தன் சொந்த வீட்டிலோ நாட்டிலோ வாழ்வது பாதுகாப்பற்றது என்பதால் அவ்விடத்தை விட்டு அகன்று அநாதையானால் விசேட பாதுகாப்பும் உதவியும் பெறும் உரிமை அச்சிறுவன் அல்லது சிறுமிக்கு உண்டு.
• உறுப்புரை 23 - ஊனமுற்ற சிறுவர்கள்
உள மற்றும் உடல் ஊனமுற்ற பிள்கைள் கண்ணியத்துடன் வாழ்வதற்கும் முடிந்த வரை சிறப்பான முறையில் தம் சொந்தக் காலில் நிற்கவும் சமுதாயத்துடன் இணைந்து கொள்ளவும் வாய்ப்புப் பெறும் பொருட்டு விசேட பராமரிப்பு, கல்வி, பயிற்சி என்பனவற்றைப் பெறும் உரிமையுடையவர்களாவர்.
• உறுப்புரை 24 - சுகாதாரமும் சுகாதார சேவைகளும்
மிக உயர்ந்த தராதரமுடைய சுகாதாரத்தையும் பராமரிப்பையும் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. ஆரம்ப மற்றும் நோய்த்தடுப்புச் சுகாதாரப் பராமரிப்பு, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு, பொதுச் சுகாதாரக் கல்வி, சிசு மரண விகிதாசாரத்தைக் குறைத்தல் ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்தல் வேண்டும்.
• உறுப்புரை 25 - தாபரிப்பிடத்தை அவ்வப்போது கண்காணித்தல்
பராமரிப்பு, பாதுகாப்பு அல்லது சிகிச்சைக்கெனத் தாபரிப்பு இடமொன்றில் அரசாங்கத்தாற் கையளிக்கப்பட்ட பிள்ளை, அவ்விடத்தில் முறையாகத் தாபரிக்கப் படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்கும் கடமை அரசாங்கத்திற்கு உண்டு.
• உறுப்புரை 26 - சமூகப் பாதுகாப்பு
சகல சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் உள்ள பயன்களைப் பெறும் உரிமை பிள்ளைக்கு உண்டு.
• உறுப்புரை 27 - வாழ்க்கைத் தரம்
ஒவ்வொரு பிள்ளையும் இசைவான வாழ்க்கைத் தரத்தைப் பெறும் உரிமை உடையதாகும். பிள்ளை தகுந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தும் தலையாய பொறுப்பு பெற்றோரைச் சாரும், இந்தப் பொறுப்பை நிறைவேற்ற பெற்றோரால் முடியாதபோது அவர்களுக்கு உதவுதல் அரசின் பொறுப்பாகும்.
• உறுப்புரை 28 - கல்வி
கல்வி பயிலும் உரிமை எல்லாப் பிள்ளைகளுக்கும் உண்டு. அரசாங்கத்தின் கடமை, ஆரம்பக் கல்வியாவது கட்டாயமாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதிப்படுத்துதல் ஆகும்.
• உறுப்பரை 29 - கல்வியின் நோக்கம்
பிள்ளையின் ஆளுமை, திறமை, உடல் மற்றும் உள ஆற்றல்கள் ஆகியவற்றை முழுமையாக விருத்தி செய்வதே கல்வியின் நோக்கம். சுதந்திரமான சமுதாயத்தில் பொறுப்புடனும், அமைதியுடனும் வாழ்வதற்கும் அடிப்படை மனித உரிமைகள், தமது சொந்தக் கலாசார, தேசிய ஆசாரலங்களை மட்டுமல்லாமல் பிறரின் விழுமியங்களையும் கனம் பண்ணுவதற்கும் கல்வி சிறுவரைத் தயார் செய்தல் வேண்டும்.
• உறுப்புரை 30 - சிறுபான்மை மக்களின் பிள்ளைகள்
தமது சொந்தக் கலாசாரத்தை அனுபவிக்கவும் தமது சொந்த மதம், மொழி ஆகியவற்றைப் பயிலவும் சிறுபான்மை இனத்தவர்களின் பிள்ளைகளுக்கு உரிமை உண்டு.
• உறுப்புரை 31 - ஓய்வு பொழுதுபோக்கு, கலாசார நடவடிக்கைகள்
பிள்ளைகள் ஓய்ந்திருக்கவும் விளையாட்டு, கலாசார, கலை நிகழ்ச்சிகளிற் பங்குபற்றவும் உரிமையுடையவர்களாவர்.
• உறுப்புரை 32 - பால்ய ஊழியம்
ஆரோக்கியம், கல்வி அல்லது மேம்பாடு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வேலைப் பளுவிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. தொழில் புரியம் குறைந்த பட்ச வயதெல்லையை நிர்ணயிப்பதும் வேலை நிபந்தனைகளை நெறிப்படுத்துவதும் அரசின் கடமையாகும்.
• உறுப்புரை 33 - போதைப் பொருட் துஸ்ப்பிரயோகம்
சட்டவிரோதமான மருந்துகளையும், வேறு போதை வஸ்துகளையும் உபயோகிப் பதிலிருந்தும் அவற்றைத் தயாரித்தல் அல்லது விநியோகித்தல் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கப்படும் உரிமை சிறுவருக்கு உண்டு.
• உறுப்புரை 34 - பாலியல் இம்சை
விபசாரம் மற்றும் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படல் உட்பட, பாலியல் சார்ந்த சுரண்டல் அல்லது இம்சையிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை ஒவ்வொரு பிள்ளைக்கும் உண்டு.
• உறுப்புரை 35 - விற்பனை, பரிவர்த்தனை, கடத்தல்
பிள்ளைகளை விற்பனை செய்தல், பரிவர்த்தனை செய்தல் அல்லது கடத்திச் செல்லுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுதல் வேண்டும்.
• உறுப்புரை 36 - ஏனைய இம்சைகள்
பிள்ளைகளின் சேமநலன் சார்ந்த உறுப்புரைகள் 32, 33, 34, 35 ஆகியவற்றிற் குறிப்பிடாத மற்றெல்லா இம்சைகளிலிருந்தும் அரசாங்கம் பிள்ளையைப் பாதுகாத்தல் வேண்டும்.
• உறுப்புரை 37 - சித்திரவதை, சுதந்திரத்தை மறுத்தல்
எந்தப் பிள்ளையும் சித்திரவதை, துன்பம், தண்டனை, சட்டவிரோதக் கைது அல்லது சுதந்திரத்தை மறுத்தல் ஆகியவற்றுக்கு ஆளாக்கப்படலாகது, தகுந்த சிகிச்சை, தடுப்புக் காவலில் உள்ள பெரியவர்களிடமிருந்து பிரிந்திருத்தல், குடும்பத்தவர்களுடன் தொடர்பு பேணல், சட்ட மற்றும் பிற உதவி பெறும் வாய்ப்பு ஆகியன ஒவ்வொரு பிள்ளையினதும் உரிமைகளாம்.
• உறுப்புரை 38 - ஆயுதப் பிணக்குகள்
போர்க் காலங்களில் பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. 15 வயதுக்குட்பட்ட எந்தப் பிள்ளையும் சண்டைகளில் நேரடியாகப் பங்குகொள்ளவோ ஆயுதப் படைகளிற் சேர்க்கப்படவோ கூடாது.
• உறுப்புரை 39 - புனர்வாழ்வு, பராமரிப்பு
ஆயுதமேந்திய சண்டைகள், சித்திரவதை, புறக்கணிப்பு, துன்புறுத்தல், சுரண்டல் ஆகியவற்றுக்கு இலக்கான பிள்ளைகள் குணமடைவதற்கான சிகிச்சை பெறுவதையும் சமுதாயத்தில் மீண்டும் இணைந்து கொள்வதையம் உறுதிப்படுத்துதல் அரசின் கடமையாகும்.
• உறுப்புரை 40 - பால் நீதி பரிபாலனம்
பிள்ளைகள் குற்றம் இழைத்தவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டால் சட்ட மற்றும் ஏனைய உதவிபெறும் உரிமை அவர்களுக்கு உண்டு.
• உறுப்புரை 41 - நடைமுறையிலுள்ள நியமங்களை மதித்தல்
சிறுவர் உரிமைகள் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தில் வரையப்பட்ட நியமங்கள் இந்தச் சமவாயத்தில் உள்ளவற்றிலும் உயர்ந்தனவாக விளங்கும் பட்சத்தில், உயர்ந்த நியமமே என்றும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
• உறுப்புரை 42 - அமுலாக்கல்
இந்தச் சமவாயத்திற் சொல்லப்பட்டுள்ள உரிமைகளை வயது வந்தோருக்கும் சிறுவர்களுக்கும் பரவலாக அறியச் செய்தல் அரசாங்கத்தின் கடமையாகும்பிள்ளை என்பதன் வரையறை
18 வயதுக்கு குறைந்த அனைவரும் சிறுவர்களாவர்.
இவற்றுடன் இச் சமவாயத்தின் ஏனைய உறுப்புரைகள் சமவாயத்தினை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஐந்தாண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கும் அரசாங்கத்தை சாறும் என கூறுவதுடன் சமவாயத்துக்கு தம்மை அர்ப்பணித்தல் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் விபரிக்கின்றன.
“பிள்ளைகளின் பாதுகாப்பும், நாடுகளுக்கிடையிலான சுவீகாரம் தொடர்பில் ஒத்துழைப்பும் பற்றிய ஹேக் உடன்படிக்கை போன்ற சர்வதேச சட்ட சாதனங்களின் உருவாக்கத்திற்கும் அடிப்படையாய் அமைந்தது.
இதனுடன் “சிறுவர் ஊதியத்தின் மோசமான வடிவங்கள் பற்றிய புதிய ILO” உடன்படிக்கை சிறுவர் ஊழியம் தொடர்பான விளக்கங்களினை அளிப்பதாக அமைந்தது.
“பிள்ளைகளின் உரிமைகளும் ஆக்க நலமும் பற்றிய ஆபிரிக்கப் பட்டயம்” போன்ற பல்வேறு பிராந்திய சாதனங்கள் இவ்வுடன்படிக்கையினை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையாகும்.
இவற்றுடன் இவ் உடன்படிக்கையானது இராணுவ ஆட்சேர்ப்புக்கும், ஆயுத மோதல்களில் பங்கு பற்றுவதற்கான குறைந்த பட்ச வயதினை உயர்த்துவதற்கும், சர்வதேச ஒத்துழைப்பினூடாக பாலியல் சுரண்டலிலிருந்து பிள்ளைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குமான பின்னேடுகளை வகுப்பதற்குமான செயல்முறைகளுக்கு வழிவகுத்தது.
இவ்வாறான உடன்படிக்கைகளின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சனத்தை நாடுகள் நடைமுறைப்படுத்தும் முறைக
சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையானது அரசுகள் தேசிய மட்டங்களில் பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அங்கீகரிப்பதற்குமான வழிமுறைகளை உருவாக்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அவ்வகையில் இன்று குறைந்தது 22 நாடுகள் சிறுவர் உரிமைகளினைத் தமது அரசியலமைப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. இவற்றில் பிறேசில், ஈக்வடோர், எதியோப்பியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் உள்ளடங்குகின்றமை முக்கிய அம்சமாகும்.
இதனோடு 50 இற்கும் அதிகமான நாடுகள் இவ் உடன்படிக்கையின் ஏற்பாடுகளுடன் ஒத்தியல்பை உறுதிப்படுத்துவதற்கு சட்ட மீளாய்வு செயல்முறையொன்றினைக் கொண்டுள்ளன.
பொலிவியா, பிறேசில், நிக்கரகுவா போன்ற நாடுகள் பிள்ளைகளினதும் வளரினம் பருவத்தினரினதும் உரிமைகள் தொடர்பான ஒழுக்கக் கோவையொன்று கைக்கொள்ளப்படுதலை ஊக்குவித்துள்ளன.
இவற்றுடன் ஏனைய நாடுகள் சட்டவாக்க மாற்றங்கள் தேவைப்படுகின்ற பரப்புக்களில் மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான மாற்றங்களும் நாடுகளும் பின்வருமாறு:
சிறுவர் ஊழியம் : இந்தியா, பாக்கிஸ்தான், போர்த்துக்கல்
பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாப்பு : அவுஸ்ரேலியா, பெல்ஜியம், ஜேர்மனி, சுவீடன்,தாய்லாந்து
இளம்பருவத்தினர் நீதி : பிறேசில், கொஸ்ராரிக்கா, எல்சல்வடோர்
நாடுகளுக்கிடையிலான சுவீகாரம் : பராகுவே, ருமேனியா, ஐக்கிய இராச்சியம்
மேற்கூறியவற்றுடன் சில நாடுகள் குறித்த நடத்தையில் மாற்றங்களை ஊக்கவிப்பதற்கும், உடன்படிக்கையின் சரத்துக்களுடனும், ஏற்பாடுகளுடனும் ஒத்தியலாத பழக்கங்களை தடை செய்வதற்கும் முக்கியமான சட்டவாக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
உதாரணம் :
பாடசாலைகளிலும், குடும்பத்திலும் பிள்ளைகளுக்கு உடல் சார்ந்த தண்டனையை தடை செய்தலினை ஆஸ்திரியா, சைப்பிரஸ், ஸ்கன்டினேவிய நாடுகள் போன்றன நடைமுறைப்படுத்தியுள்ளன.
சிறுவர் சட்டங்கள் (கோப்பில் கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்து வாசிக்க)
No comments:
Post a Comment