இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Monday, April 15, 2013

சாட்டை - திரைப்படம் ஒரு நோக்கு



balamuruganபுது இயக்குனர் அன்பழகன் தன் முதல் படத்திலேயே கல்வியையும் கல்வி நிறுவனத்தையும் விமர்சித்துப் படம் எடுத்திருப்பது ஆரோக்கியமான தொடக்கமாகவே கருதுகிறேன். தன் முதல் படங்களில் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கப் பொதுவாக வர்த்தக தனங்களையே நாடுவார்கள். அன்பழகன் தனக்கிருந்த ஒரு மாற்றுக் கருத்தைப் படத்தின்வழி சமூகத்திடம் பகிர்ந்துள்ளார். இதனாலேயே அவரை 2012ஆம் ஆண்டின் கவனிக்கத்தக்க இயக்குனர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

சமீபத்தில் இந்தித் திரை உலகில் தொடங்கிய அமீர்கானின் ‘தாரே சமீன் பார்’ படத்தின் மூலம் கல்வி குறித்து ஒரு பிரக்ஞை சினிமா உலகில் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். அதனையடுத்து, 3 இடியட்ஸ்(இந்தி), நண்பன்(தமிழ்), டோனி, இப்பொழுது சாட்டை, ஹரிதாஸ் என இப்பட்டியல் நீள்கிறது. தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படம் கல்வியை நோக்கிய விமர்சனம் கிடையாது. அப்படம் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை எக்கத்தொனியில் வெளிப்படுத்தியது.

இப்பட வரிசையில் நான் ‘சாட்டை’ படத்தையே கல்வி நிறுவனத்தையும் ஆசிரியர்களையும் மாணவர் சமூகத்தையும் நோக்கி விமர்சித்த முக்கியமான படம் எனக் கருதுகிறேன்.

கல்வி நிறுவனமும் அதிகாரமும்

பெரும்பாலான பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் இருந்து விடுதலை பெற்ற அனைத்து நாடுகளுமே இன்னமும் பிரிட்டிஸ் அரசு நமக்கு கொடுத்த கல்வி அமைப்பையே பின்பற்றி வருகின்றது. மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் கல்வி குறித்து பெரிதளவில் மாற்றங்கள் இன்னமும் வரவில்லை. இதுவரை எப்படமும் ஆண்டானின் கல்வி கொள்கையைப் பின்பற்றும் நம்மிடமிருந்து விடுப்படாத காலனிய மனோபாவத்தைக் கேள்விக்குட்படுத்தியதே கிடையாது. காலத்தால் இந்தப் பிரக்ஞை வேரறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அதனை எதிர்த்து விழிப்புணர்வூட்டும் வகையில் படங்கள் வந்தால் மட்டுமே அப்படத்தைப் புதிய கல்வி சிந்தனையுடைய படம் எனக் குறிப்பிடலாம்.

அப்பிரக்ஞை ஏதும் இல்லாமல் கல்வியைப் போதிக்கும் நிறுவனம் எப்படிச் செயல்படுகின்றது என்கிற உண்மையை உணர்த்தவே சாட்டை விளைந்துள்ளது. இது மகத்தான பாய்ச்சல் கிடையாது. ஆனால், அவசியம் விவாதிக்க வேண்டிய விடயம். கல்விக் கொள்கைகள் எத்தகையதாக இருப்பினும் அதனை மாணவர்களுக்கு வழங்கும் கல்விக்கூடங்கள் அடிப்படை மனித உரிமைகளைப் பின்பற்றுவதிலிருந்து தவறவே கூடாது. முறையற்ற கல்வி அமைப்பை அமலாக்கம் செய்யும் அரசிடமிருந்து இலவசக் கல்வியைக் கோருவது அபத்தமாக இருந்தாலும், அடிப்படை கல்வியைப் பெறுவதற்கே வசதியில்லாமல் தடுமாறும் அடித்தட்டு மக்களின் வர்க்கநிலையைக் கருத்தில் கொள்ளும்போது அரசின் அதிகாரத்திற்கும் எல்லைக்கோடுகள் வழங்கும் வாழ்க்கை தரிசனங்களுக்கும் மத்தியில் நம்முடைய தர்க்கம் சற்று தடுமாறி நிற்கின்றது. முதலில் அதிகாரத்தை நோக்கி அடிப்படை வாதங்களையே முன்னெடுத்துச் செல்கிறது.

அப்படிப்பட்ட எதிர்நிலையில் நின்று கொண்டு ஆரம்பகாலம்தொட்டே மாறாமல் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் கல்வி கொள்கைகளை விமர்சிப்பதா அல்லது ஏற்கனவே கல்விக்கூடங்களில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களின் நிலையையாவது கருத்தில்கொண்டு மாற்று முயற்சிக்கு முயல்வதா என்ற கேள்விலேயே இன்றைய நூற்றாண்டு நகர்ந்துகொண்டிருக்கிறது. நான் ஓர் ஆசிரியராக இன்றைய கல்வி அமைப்பைக் குறைக்கூறுவதைவிட நானும் எனக்கு உட்பட்டவர்களும் முடிந்தளவு எங்கள் வகுப்பறைகளை மாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்று முயற்சிகளை ஓராளவிற்குப் பரப்பிக்கொண்டிருக்கிறோம். மரபை விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர வேண்டிய சூழல்.

இப்படியொரு மாற்றத்திற்கான சாத்தியங்களை நோக்கியே ‘சாட்டை’ படம் சமூகத்துடன் விவாதிக்கின்றது. தன்னுடைய நியாயங்களைத் தர்க்கம் செய்கின்றது. அதிகாரமிக்க ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ‘சீனியரிட்டி’ எப்படி ஒரு நோயாக மனத்தில் ஆழப்புதைந்து வேருன்றி படர்ந்திருக்கின்றது என்பதைப் பற்றி பேசுகிறது. அப்பள்ளியில் வேலை செய்யும் துணைத்தலைமை ஆசிரியர் சீனியர் என்கிற பெயரில் எப்படி அதிகாரத்தைச் செலுத்துகிறார் என்பதையும் எப்படிப் பள்ளியின் நிர்வாக கட்டுப்பாட்டைத் தன் வசம் கொண்டு வருகிறார் என்றும் அன்பழகன் சொல்லியிருக்கிறார். இன்று பெரும்பாலான பள்ளிகளில் இதுபோன்ற அதிகார சிக்கல்களும் ஆக்கிரமிப்பு முயற்சிகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. கல்வியை வழங்கும் நிர்வாகத்தை யார் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது எனும் போட்டி ஒவ்வொருவரின் மனத்திற்குள்ளும் கனன்று எரிந்துகொண்டிருக்கின்றது. பதவியில் இருப்பவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் அவர்களின் நிரந்திர விசுவாசிகளாகிவிடலாம் எனத் தீர்மானித்து சக பணியாட்களுடன் சிறுக சிறுக பகையையும் வெறுபையும் வளர்த்துக் கொள்ளத் துவங்குகிறார்கள்.

துரோகமும் வெறுப்பும் அவர்களின் மத்தியில் மெல்ல வளர்ந்து அடர்கின்றன. அவர்களின் மூளைக்குள் குடைந்து சிந்தனையைக் கூர்மைப்படுத்துகின்றன. அதிகாரத்தை நேசிக்கத் துவங்குகிறார்கள். பதவி கொண்டவர்களை நோக்கி வெறியுடன் விசுவாசிக்கிறார்கள். இவையனைத்திற்கும் ‘சீனியரிட்டி’ என்ற ஒரே அடையாளத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். சீனியரீட்டியின் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் அதிகாரப் பற்று மிகவும் குரூரமாக தன் சுயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. சாட்டை படத்தில் வரும் அந்தத் துணைத்தலைமையாசிரியரின் கதாபாத்திரம் மிகவும் வன்மத்துடன் அப்பள்ளியின் நிர்வாகத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் இப்படித் தன் அதிகார மையத்தை உருவாக்க மட்டுமே போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர் வர்க்கத்தை விமர்சிக்கவே சாட்டை தன்னை முன்வைக்கிறது. கடமை, பணி என விதிக்கப்பட்டு வேலை வாங்கப்படும் கொடுமையைப் பற்றி சாட்டை அதிகமாகப் பேசவில்லை என்றாலும் அடுத்த தலைமுறையை சிந்தனை ரீதியில் மன ரீதியில் மாற்றியமைக்கக்கூடிய ஆசிரியர் சமூகம் இப்படிச் சோம்பேறிகளாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாதவர்களாக அதிகாரத்தை உருவாக்கும் பணியில் மட்டுமே இலயித்திருக்கலாமா என்பதே ‘சாட்டை’ திரைப்படத்தின் நியாயமான கேள்வியாகும். இங்கிருந்துதான் நாம் ‘சாட்டை’படத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனம் என்கிற குழாயின் ஓட்டைகள்

சாட்டை படம் மீண்டும் மீண்டும் கல்வி புதிய சிந்தனைகளைத் தவிர்த்துவிட்டு கல்வி நிறுவனத்தையும் அதன் நிர்வாகத்தின் மிகவும் மழுங்கிய புத்தியையும்தான் நம் பார்வைக்குக் கொண்டு வருகிறது. அரசிடமிருந்து நேரடியான கவனத்தையும் உதவிகளையும் பெறும் ஒரு சிறு குழாய்த்தான் கல்விக்கூடங்கள். ஆனால், கல்விக்கூடங்களில் நடைமுறையில் இருக்கும் கல்வி அமைப்புக்கும் சர்வதேச முதலாளிய நிறுவனங்களுக்கும் நேரடியான தொடர்பு உள்ளது. ஆசிய நாடுகளில் தொழிற்வளப் புரட்சிகளும் முன்னேற்றங்களும் ஏற்படத் துவங்கிய காலக்கட்டங்களில் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கவனமும் ஆர்வமும் ஆசிய நாடுகளின் வளத்தின் மீது குவிந்தன.

தொழிற் மையங்களாக ஆன ஆசிய நாடுகளில் பற்பல மேற்கத்திய பெரும்முதலாளிகள் முதலீடு செய்யத் துவங்கினர். பல வெளிநாட்டு நிறுவனங்கள் தனது உற்பத்திப் பொருள்களின் மையங்களை இங்கு உருவாக்கினர். அந்த உற்பத்தி பொருள்களின் தரத்தைப் பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களுக்குப் பயிற்சிப் பெற்ற கூலிகள் தேவை. அப்படிப்பட்ட கூலிகள் அறிவுடையவர்களாகவும் அதே சமயம் அதிகமான உழைப்பைத் தரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மேற்கத்திய பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏற்புடைய கூலிகளைத் தயார்ப்படுத்தும் மகத்தான வேலையைத்தான் அன்றைய கல்வி அமைப்புகள் செய்து வந்தன. இந்தக் கசப்பான உண்மை வரலாறு முழுக்க முன்னேற்றம் தொழிற் புரட்சி என்கிற பெயரில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.

ஆகவே, உயர்த்தர கூலிகளாக மட்டுமே ஆசிய கல்வி அமைப்புகளால் வெளியேற்றப்படும் ஒரு தலைமுறையில் நிலை என்ன? படிக்காத உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கும் படித்த பன்னாட்டு அடிமை கூலிகளுக்கும் என்ன வித்தியாசம்? இன்னமும் அயல்நாட்டு முதலாளிக்கு உழைத்துக் கொடுப்பவர்களாகத்தான் பலரை உருவாக்கி வைத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் ‘சாட்டை’ படம் விமர்சித்துள்ளதா? இல்லை. ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி இத்தனை மோசமான கல்வி அமைப்பை வழிநடத்தும் கல்விக்கூடங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

மாணவர்களுக்கும் கல்வி பெரும் முதலாளிகளுக்கும் தொடர்பே இல்லை. அவர்கள் எதிர்க்கொள்வது ஆசிரியர்களை மட்டுமே. குறைந்தபட்சம் அந்த ஆசிரியர்களாவது நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கைகளை மீறி மாணவர்களை எதிர்கால சவாலுக்குத் தயார்ப்படுத்தலாமே என்ற கேள்வித்தான் சாட்டை படத்தினுடையதாகும். குறைந்தபட்சம் பள்ளி நிர்வாகமாவது மாணவர்களின் நலனில் அவர்களின் உருவாக்கத்தில் அக்கறை செலுத்தலாமே என்பதுதான் ‘சாட்டை’ படத்தின் தார்மீகம்.

சாட்டை படத்தின் பாராட்டப்பட வேண்டிய விசயங்கள்:

சமுத்திரக்கணி தன் வகுப்பறை சூழலையும் மாணவர்கள் அமரும் முறையையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கிறார். மாணவர்கள் கல்வி பயிலும் சூழலைப் புதுப்பிப்பதன் மூலம் அவர்களின் சலிப்பைக் கொஞ்சம் குறைக்க முடியும். மேலும், மரத்தடி, வகுப்புக்கு வெளியே பயிலுதல் என்ற மாற்றத்தையும் அவ்வப்போது முன்னெடுக்க வேண்டும். இதன்வழி அவர்களின் சோர்வு நீங்கும். புத்தகத்தை எடு, படி எனும் போதனைமுறையிலிருந்து சற்று விலகிய நிலைகள் இது. இப்படத்தில் இந்த மாற்றங்கள் ஒரு பாடலில் காட்டப்படுகின்றன. கல்வி அமைப்பு மாற வேண்டும் என்கிற உயர் ரகக் கோரிக்கை ஒரு பக்கம் இருக்க, இப்பொழுது இருக்கும் சூழலை எப்படிக் கொஞ்சம் மாற்றியமைத்து அடுத்த மாற்றத்திற்கு அடியெடுத்து வைக்க முடியும் எனப் பார்க்க முனைந்துள்ளது சாட்டை.

அடுத்ததாக, வாசிப்புத் தடுமாற்றமுள்ள ஒரு மாணவியை ஒரு சிறந்த உத்தியின் வழி எதிர்க்கொள்ளும் காட்சிகள் கவனித்தக்கவை. புத்தகத்தைத் த��ைக்கீழாக வைத்துப் படிப்பதன் மூலம் வாசிப்பு உச்சரிப்பு பலவீனங்களைக் கடக்க முடியும் என்ற வழிக்காட்டுதல் புகுத்தப்பட்டுள்ளது. அதனை என் வகுப்பில் செய்து பார்த்து மாற்றத்தைச் சந்திக்க முடிந்தது. சிறந்த வாசிப்புக்கு ஒரே முறையில் கொடுக்கப்படும் எவ்வித கடுமையான பயிற்சியும் பலனை அளிக்கவல்லதல்ல. மாற்றாக புதிய உத்திகளை/சிந்தனைகளை உள்ளடக்கிய வழிமுறைகள் கொஞ்சமாவது மாற்றத்திற்கு வித்திடும் என்பதுதான் உண்மை. நாம் ஒரே பிரச்சனை உள்ள மாணவர்களுக்கு ஒரே விதமான பயிற்சிகளைத்தான் நம்பியிருக்கின்றோம். இந்த விசயத்தில் சாட்டை ஒரு புதிய தேடலை முன்வைத்துள்ளது.

இப்படி வகுப்பு போதனைமுறை சார்ந்த சில விசயத்தில் புதிய மாற்றங்கள் தேவை என்பதைச் சாட்டை படம் வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், அது மாற்றுக் கல்விமுறைக்கான முனைதலா என்றால் இல்லை சென்றே சொல்ல வேண்டும். இருக்கும் கல்வி அமைப்பில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு வெறென்ன பயனான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதைப் பற்றியே இயக்குனர் அன்பழகன் சிந்தித்துள்ளார். இவர் இன்னும் ஆசிய கல்விக் கொள்கைளையும் ஆசிய மக்களின் வாழ்க்கைமுறையையும் ஒப்பிட்டு ஆழமாகச் சிந்தித்து விமர்சிக்கத் தொடங்கினால் அது மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

மாணவர்களின் எதிர்பார்ப்புகளை அவர்களின் மனவெளிப்பாடுகளைக் கேட்டறிவது என்பது கல்விக்கூட நிர்வாகங்கள் செய்வது அவசியமாகும். நாம் அளிக்கும் கல்வியைப் பெற்றுக்கொள்பவர்கள் என்கிற முறையில் அது குறித்த எண்ணங்களைக் கருத்துகளை வெளிப்படுத்துவது அவர்களின் உரிமையாகும். ஆனால், காலம் காலமாக மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை. நாம் கொடுப்பதை எதுவாக இருந்தாலும் அதைப் பெற்றுக்கொள்வதே மாணவர்களின் கடமை எனச் சொல்லி அவர்களை முடக்கி வைத்திருக்கிறோம்.

சாட்டை படத்தில் நிகழும் மேலுமொரு மாற்றம் மாணவர்கள் அவர்களின் எண்ணங்களை அவர்களின் மனக்குமுறல்களைச் சொல்லும் வாய்ப்புத்தான். புதியதாக அப்பள்ளிக்கு வேலைக்கு வரும் சமுத்திரக்கனி மாணவர்கள் அவர்களின் பிரச்சனைகளை எழுதி போடும் பெட்டியை ஏற்பாடு செய்கிறார். அந்தத் திட்டத்தின் வழி மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் புகார்கள்:

1. எல்லோர் முன்பும் எங்களை அவமானப்படுத்தாதீர்கள்
2. எங்களை இழிவாகப் பேசாதீர்கள்
3. பெற்றோர்கள் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக எங்களை வெளியே நிறுத்தாதீர்கள்

புகார்களும் எதிர்ப்பார்ப்புகளும் இப்படி நீள்கின்றன. அடிப்படையில் கல்விக்கூடங்களை நோக்கிக் கல்வி கற்க செல்லும் மாணவர்களும் மனிதர்களே. படித்துத் தேர்வெழுதும் விலங்குகளாக மட்டும் அவர்களைக் கல்வி நிறுவனங்கள் வழிநடத்துவது கண்டிக்கத்தக்கதே. கல்வி அமைப்புமுறையை விட, மாணவர்களை மனிதனாக நடத்தும் மனித உரிமை குறித்த சிந்தனை மாற்றம் கல்விக்கூடங்களில் நிகழ வேண்டும். இதைத்தான் சாட்டை அழுத்தமாகப் பேசுகிறது.

சாட்டை படம் ஆசிரியர்களிடம் கல்வி அமைப்புமுறைக்கோ அல்லது அவர்களின் முதலாளிகளுக்கு விசுவாசிகளாகவோ இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவில்லை. நம்மிடம் பயிலும் மாணவர்களை மரியாதையாக நடத்தவும், அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும், சிறு சிறு மாற்றங்களின்வழி முடிந்த அளவிற்கு அவர்களைப் பக்குவப்படுத்தவும், சொந்த விருப்பு வெறுப்புகளை அவர்கள் மீது திணிக்காமலும் இருந்தாலே போதும் என்பதுதான் இப்படத்தின் கவனம்.

 


No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News