இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Saturday, February 16, 2013

வானிலையும் ஒரு ஆயுதமாகும் அபாயம் (The Modern Concept of Geoengineering)

climate change-936இன்று உலகில் தகவல் தொழில்நுட்பம், கணினி, சிவில், மெக்கானிகல் என்று பலவிதமான பொறியியல் பாடங்கள் உள்ளன. இப்போது உலக அளவில் ஒரு புதிய பொறியியல் உருவாகிக் கொண்டுள்ளது. இதற்குப் பெயர் புவிப்பொறியியல்.


. ஆங்கிலத்தில் ஜியோ என்ஜினீயரிங் என்று சொல்கிறார்கள்.இது இன்னமும் பாடத்திட்டமாக வரும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை. புவிப்பொறியியல் என்றால் என்ன? பொறியியல் என்றாலே இயற்கையிலேயே பல மாற்றங்களை உருவாக்கி நமக்கு சாதகமாக இயற்கையைப் பயன்படுத்தும் திறன் என்றுதான் பொருள்.. உதாரணமாக, ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும் நீரை ஓடவிடாமல் தடுத்து தேக்கி வைப்பது, அப்படி தேக்கிய நீரைக் கொண்டு நமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வது. அப்படிப் பார்த்தால், புவிப்பொறியியலில் என்ன செய்யப் போகிறார்கள்? இயற்கையின் எந்தப் பகுதியை எப்படி மாற்றப் போகிறார்கள்? அதனால் நாம் அடையப்போகும் பயன் என்ன? புவிப்பொறியியல் உலகின் வானிலையே மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு மாற்றியமைத்து, நமது தேவைக்கேற்ப புதிய வானிலையை உருவாக்குவது. இது எதற்காக? மனிதர்களால் கட்டுப்பாடற்ற முறையில் தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவால் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அவ்வாறு பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பது மனித குலம் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ முடியாத ஒரு சூழ்நிலையை அடிப்படையாக உருவாக்கிக் கொண்டுள்ளது.


பூமியின் இந்த வெப்பமடைதலை எப்படியேனும் குறைக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு பதிலாக வெப்பநிலை உயர்வை மட்டும் எப்படி குறைப்பது என்பதுதான் நோக்கம், சூரியனில் இருந்து பூமிக்கு வந்தடையும் ஒளியை எப்படி குறைப்பது அல்லது மனிதர்களால் கட்டுப்பாடில்லாமல் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எப்படி எடுப்பது. இந்த வழிக்கான முயற்சிதான் புவிப்பொறியியல் என்பது. தொழிற்புரட்சி ஏற்பட்ட காலங்களில் இருந்து நமது பூமியில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இது இயற்கையாக நடைபெறும் நிகழ்வு அல்ல. இதற்கு முக்கிய காரணம் வரம்பு முறையின்றி அதிகளவில் பெட்ரோலிய எரிபொருள்களை மனிதர்கள் எரிப்பதுதான் தொழிற்சாலைகள் இயங்க எரிபொருள்கள் தேவை, வாகனங்களுக்கும் பெட்ரோலிய எரிபொருட்கள் தேவை. மின்சாரம் உற்பத்தி செய்ய அவை தேவை. இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். சொல்லப்போனால் ஒரு நாட்டின் வளர்ச்சியே பெட்ரோலியப் பொருள்களை நம்பித்தான் உள்ளது. பெட்ரோலிய எரிபொருள்களை எரிக்கும் போது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. இப்படி வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு தான் இன்று நமக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.


கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்களால் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளின் பெரும் பகுதி பூமியின் வளி மண்டலத்திலேயே தங்கிவிட்டன. தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திற்கு முன் வளிமண்டலத்தில் இருந்த கார்பனின் அளவு 180 பி.பி.எம், (இந்த எண் என்னவென்று புரியாவிட்டால் பரவாயில்லை, பிபிஎம் என்பது PRTS PAR MILLIONஎன்பது. அதாவது வளிமண்டலத்தில் உள்ள அனைத்து வாயுக்களையும் எடுத்துக் கொண்டு அதை 10 லட்சம் பங்குகளாய் பிரித்தால் அதில் 180 பங்கு கார்பன் என்பது இந்த எண்ணில் பொருள். இன்று இந்த வாயுவின் அளவு 380 பிபிஎம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இன்னமும் தொடர்ந்து அதிகரிக்கும் 300 பிபிஎம்க்கு மேலிருந்தால் பூமியின் இன்றிடுக்கு சுற்றுபுறச் சூழல்கள் பெரிதும் மாறிவிடும் நிலை ஏற்படும். கடந்த 65,000 ஆண்டுகளாக பூமியின் வளிமண்டலத்தில் இந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளின் அளவு எப்போதும் இருந்ததில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. பூமியின் வெப்பநிலை இதனால் அதிகரித்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து பூமியின் வெப்பநிலை ஏறிக்கொண்டே போனால் பூமியின் உயிரினங்கள் வாழ்வதே கேள்விக்குறியாகிவிடும்.


இதற்கு என்ன செய்ய வேண்டும்? கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதை குறைப்பதுதான் தீர்வு. ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. தீர்வு என்னவென்று தெரிந்தபிறகு அதைச் செய்வதில் என்னச் சிக்கல்? இரண்டு வழிகளில் கார்பன் வாயு வெளியிடப்படுவதைக் குறைக்கலாம். முதல்வழி தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இரண்டாவது வழி புதிய தொழில் நுட்பத்தை உபயோகித்து வெளியிடப்படும் கார்பனின் அளவை குறைக்க வேண்டும்.


முதல் வழியைப் பின்பற்றினால் ஒரு நாட்டின் வளர்ச்சியே குறைந்து விடும். இரண்டாவது வழி அதிகமாக செலவாகும் வழி யார் இந்த செலவை ஏற்றுக்கொள்வது? தொழில்வளர்ச்சியின் பயன்களை நுகர்வோர் என்ற முறையில் பொதுமக்கள் மீது ஏற்றிவிட்டால் பொதுமக்களின் கோபத்தையும், அதிருப்தியையும் ஒரு அரசு சம்பாதிக்க நேரிடும். மாறாக தொழிற்சாலைகளின் உரிமையாளர்களான பன்னாட்டு முதலாளிகள் இந்த செலவை ஏற்றுக்கொண்டால் அவர்களின் லாபம் பெருமளவு குறைந்துவிடும். இந்த இரண்டிற்கும் வளர்ந்த நாடுகள் ஓப்புக் கொள்ளவில்லை.


கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகள் வளர்ந்த நாடுகள்தான். குறிப்பாக உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் உள்ள அமெரிக்கா தான் சுமார் உலகின் 25 சதவீத கார்பன் வாயுவை வெளியிடுகிறது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பலமுறை கூடியும் இதற்கு ஒரு நல்ல செயல்திட்டத்தை எட்ட முடியவில்லை. காரணம் பொருளாதாரச் சிக்கல்தான்.


தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திற்கு முன்பிறந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு குறைய வேண்டுமானால் வருடத்திற்கு 1 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள்) செலவழிக்க வேண்டும். இந்த அளவிற்கு செலவு செய்யாமல் மிகக் குறைந்த அளவு செலவிலேயே பூமி வெப்பமடைவதை நிறுத்த முடியுமா? அப்படி ஒரு வழி இருப்பதாக வளர்ந்த நாடுகளில் சிலர் நம்புகின்றனர். அந்த வழிதான் இந்த புவிப்பொறியியல் அல்லது ஜியோ என்ஜினீயரிங்.


கார்பன் டை ஆக்ஸைடு கட்டுப்பாடற்ற முறையில் வெளியிடப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பூமியின் வெப்பநிலை உயரக்கூடாது அவ்வளவு தானே, கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதை கட்டுப்படுத்துவது என்ற முயற்சியை விட்டு சமாளிப்பது என்று பாருங்கள். அதற்கு என்ன வழி உள்ளது? இரண்டு வழிகள் நம்பப்படுகின்றன. ஒன்று பூமியை வந்தடையும் சூரிய ஒளியைக் குறைப்பது, மற்றொரு வழி வெளியிடப்பட்ட கார்பனை வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எடுத்து விடுவது. இந்த வழிகளை செய்துவிட்டால், கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளிப்படும் அளவை நாம் கட்டுப்படுத்த தேவையில்லை.


இதற்கு பல வழிகள் சொல்லப்படுகின்றன. சூரியனில் இருந்து பூமியை வந்தடையும் ஒளியில் 2 சதவீதம் குறைத்து விட்டால் போதும், பூமியின் வெப்பநிலையை பழைய நிலைக்கே கொண்டு வந்துவிடலாம். இதற்காக பிரம்மாண்டமான மேகங்களை உருவாக்கலாம். 300 கப்பல்களைக் கொண்டு தொடர்ந்து மாபெரும் புரொப்பெல்லர்களின் உதவியுடன் கடல் நிலத் துகள்களை வானில் தெளிப்பது. அவை வளிமண்டலத்திற்கு சென்று பெரும்மேகங்களாக மாறிவிடும், பூமிக்கு ஒரு மாபெரும் குடையாக மாறிவிடும். மற்றொரு வழியில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள துப்பாக்கிகள் (ஹோஸ் பைப்புகள்) மிக உயர்ந்த இடங்களில் நிறுவுவது. ஒவ்வொரு துப்பாக்கி மூலமும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 8 லட்சம் சிறிய தகடுகளை வானில் செலுத்துவது. இதுசுமார் 10 வருடங்களுக்கு தினமும் 24 மணிநேரம் செய்வது. இந்தத் தகடுகள் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் மிதக்கும் இவையும் குடைபோல் சூரிய ஒளியை தடுத்து நிறுத்திவிடும். மற்றொரு வழி வானில் பெரும் அளவில் விமானங்களின் துணைகொண்டு கந்தகத்துகள்களை தூவுவது. இந்த கந்தகத் துகள்கள், பூமியை வந்தடையும் ஒளியை விண்ணுக்கே திருப்பி அனுப்பிவிடும். மாலை நேரத்தில் வானம் ரத்த சிவப்பாக இருக்கும். பகல் வேலையும் நீலநிற வானத்திற்குப் பதிலாக நல்ல வெண்மையான மேகமாக இருக்கும். இவையெல்லாம் சூரிய ஒளியை தடுப்பதற்கான வழிகள்.


மனிதர்களால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எடுப்பது எப்படி? இதற்கும் பல வழிகள் கூறப்படுகின்றன. கடலில் பிளாங்டன் என்ற ஒருவகை உயிரினம் உள்ளது. அவை கார்பன் டை ஆக்ஸைடை அதிகளவில் உண்ணக்கூடியவை. அவை வளர்வதற்கு இரும்புச்சக்தி தேவை. எனவே கடலில் பெரிய அளவில் இரும்புத் துகள்களைத் தூவுவது.


இந்த வழிகள் நடைமுறையில் சாத்தியமா? இப்படி செய்வது சரியா? பெரும்பாலான அறிவியல் வல்லுநர்கள் இந்த முறைகளை ஏற்றுக் கொள்வதில்லை. வானிலை, தட்ப வெப்பநிலை இவைபற்றிய நிறைய விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. இந்த நிலையில் புவிப்பொறியியலில் செயல்படும் முறைகளை அமல்படுத்தினால் அவை என்ன விளைவுகள் உண்டாக்கும் என்று தெரியாது. ஆகவே இந்த முயற்சிகளை கைவிட வேண்டும், என்றுதான் பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.


இதுபோன்ற வழிகளை சிந்திப்பதற்குக் காரணம் என்ன? ஒன்று மிகக் குறைந்த செலவு. மற்றொன்று இந்த வழிகளை செயல்படுத்த அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் தேவையில்லை. ஒவ்வொரு நாடும் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப செயல்பட முடியும். அரசே தேவையில்லை, தனியார் நிறுவனங்களே இச்செயல்களை செய்ய முடியும் என்று நம்புகின்றனர். இதில்தான் வேறொரு ஆபத்து உள்ளது.


ஒரு காலக்கட்டம் வரை, புவி வெப்பமடைதலை தவிர்ப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடுவதைக் குறைப்பதுதான், ஒரே வழி என்று கருதப்பட்டது. அதற்கு மாறாக சூரிய ஒளியைக் கட்டுப்படுத்துவதோ அல்லது வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை வளிமண்டலத்தில் இருந்து எடுப்பது என்ற சிந்தனைகளே தவறு என்று கருதப்பட்டது. வானிலையை தங்கள் விருப்பத்திற்கு மாற்றலாம் என்ற கருத்தே அருவருப்பாகப் பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பியாலும் அறிவியல் வல்லுனர்களின் மதிப்பை பெருமளவில் பெற்றுள்ள அறிவியல் அமைப்புகளே, சற்று இந்தக் கருத்துகளுக்கு ஆதரவாக வருகின்றன. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்யும் அரசு நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கின்றன. பல தனியார் நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் ஆதரவும் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், பன்னாட்டு முதலாளிகளின் சார்பாக புவிவெப்பமடைதல் என்பதே உண்மையில்லை, என்று வாதிட்டவர்கள்.


உதாரணமாக அமெரிக்க எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் ஒன்றுள்ளது. புவிவெப்பமடைதலைப் பற்றியும், அதனால் ஏற்படும் வானிலை மாற்றங்களைப் பற்றியும் சர்வதேச அமைப்பு வெளியிடும் அறிக்கையை எதிர்த்து எழுதப்படும் ஒவ்வொரு ஆராய்ச்சிக், கட்டுரைக்கும் 10,000 டாலர்கள் தரப்படும் என்று கூறிய நிறுவனம் இது. இந்த நிறுவனம் புவிப்பொறியியலில் பெரும் ஆர்வம் காட்டுகிறது. ஆக இந்தப் புவி பொறியியலுக்கு பெருகிவரும் ஆதரவு வேறு கோணத்தில் இருந்து வருகிறது. புவிப் பொறியியல் இருந்து வரும் அனைத்து தீர்வுகளும் ஒரு தனியார் நிறுவனமே செய்யக்கூடியவை. நிச்சயமாக சில நாடுகள் மட்டுமே செய்யக்கூடியவை. அதாவது, உலக வானிலையைக் கட்டுப்படுத்துவது என்பது கைக்குள் வந்துவிடும் சொல்லப்போனால் அணுகுண்டுகளைப் போல் வானிலையும், மேலைநாடுகளுக்கு ஒரு ஆயுதமாக மாறும் நிலை உண்டு.


(கட்டுரையாளர் சென்னை விவேகானந்தா கல்லூரி, இயற்பியல் துறை பேராசிரியர்)

1 comment:

Thamilchelvi said...

nantaka ullathu

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News