அண்மையில் வந்த வழக்கு எண் 16/9 படத்தைப் பார்த்தபோது அது பல நினைவுகளைக் கிளர்த்தியது. அறிவியல் தொழில் நுட்பங்களை நல்லதாகவும் அல்லதாகவும் பயன்படுத்தும் மனித மனம் குறித்து வருத்தமும் கவலையும் ஏற்பட்டது. இன்றைக்குக் கையில் அலை பேசி இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். வறுமைக் கோட்டில் வாழ்பவர்க்கும் தம் வேலை நிமித்தம் பேசிகள் தேவையாயிருக்கின்றன.
இவை குறிப்பாக மாணவரிடத்துச் செலுத்தும் தாக்கம் கவனிக்குமிடத்துப் பெரும் கவலை சூழ்கிறது. 12 ஆம் வகுப்பு படிக்கும் திலீப், அஜீத் குமார், விஜய், தமிழரசன், சந்தோஷ் தினமும் பள்ளிக்கு அலைபேசி கொண்டு வருவார்கள். அதைப் பிற மாணவர்களிடம் காட்டிப் பெருமைப்படுவதன்மூலம் தங்களை உயர்த்திக்கொள்வதாக அவர்களுடைய எண்ணம். மதிய உணவு நேரத்தில், ஆசிரியர் இல்லாத பாட வேளைமற்றும் விளையாட்டு வகுப்பு நேரங்களில் குழுவாக அமர்ந்துகொண்டு அவர்கள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்களைச் சுற்றி ஒரு பெரும்கூட்டமும் இருக்கும். ஆசிரியர் அருகில் செல்லும்போது அமைதியாய் இருக்கும் கூட்டம், இல்லாதபோது சத்தமாக இருக்கும். சின்னச் சின்னதாய் அவர்களுக்குள் சண்டைகள் தொடங்கியபோது விஷயம் ஆசிரியரின் கவனத்துக்கு வந்தது. தங்கள் அலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தரவிறக்கம் செய்து பார்த்ததோடு, பிற மாணவர்களுக்கும் பரிமாறியிருக்கிறார்கள். அது இரு பாலரும் இணைந்து படிக்கும் பள்ளி; சில மாணவிகள், மாணவர்கள் தங்களைப் படம் பிடிப்பதாகப் புகார் செய்ததும் நடந்தது.
மற்றுமொரு சம்பவம். 9ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர், பள்ளிக்கு அலைபேசியைக் கொண்டு வந்ததுடன் வகுப்பில் கணிதம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் ஆசிரியரைப் படம் எடுத்திருக்கிறார்கள். கரும்பலகையில் அவர் எழுதிக் கொண்டிருக்கும்போது படம் எடுத்ததை அங்கே அமர்ந்திருந்த மாணவிகள் கூட ஆசிரியரிடம் தெரிவிக்கவில்லை. கண்டும் காணாமல் அமர்ந்திருக்க, தற்செயலாக அன்று உடற்கல்வி ஆசிரியரும் மற்றும் சில ஆசிரியர்களும் சேர்ந்து மாணவர்களின் பைகளைச் சோதனையிட்டபோது கிடைத்த அலைபேசிகளைப் பார்த்தபோது அறிய நேர்ந்தது. அந்தப் பெண் ஆசிரியர் வேலையை விட்டே சென்று விட்டார்.
மேற்சொன்ன நிகழ்வுகளெல்லாம் நகரத்தில் உள்ள பெரிய பள்ளிகளில் நிகழ்ந்தவை அல்ல. கிராமத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் நடந்தவை. பகிர்ந்துகொள்ளத்தக்க இரண்டு நிகழ்வுகளை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன். கவனிக்கப்படாமலும் சொல்லாமல் மறைக்கப்பட்டும் இன்றைக்கு ஏராளமாக நடக்கிறது. நகரத்திலிருந்தாலும் கிராமத்தில் நடந்தாலும் இது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும், குறைந்த வருமானத்தில் வாழும் குழந்தைகளையும் கூட அலைபேசிகள் அலைக்கழிக்கும் விதமே நம்மைக் கலங்கடிக்கச் செய்கிறது. கிராமப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் வார இறுதி நாட்களிலும் தேர்வு விடுமுறை நாட்களிலும் ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதிக்கும் சூழலில், தான் சம்பாதிக்கும் பணத்தைக் குடும்பத்துக்காகச் செலவழிப்பவன் கூட அதில் ஒரு சிறு பகுதியைத் தனக்காகச் செலவு செய்து கொள்வான். இத்தனை நாள் புதிய உடை வாங்குவதிலோ, நல்ல உணவு சாப்பிடுவதிலோ, அல்லது படிப்புத் தேவைக்காகவோ பயன்படுத்திய பணத்தை இப்போது சந்தைக்குப் புத்தம்புதிதாகப் பல நவீன வசதிகளுடன் வந்திருக்கும் அலைபேசிகளை வாங்குவதில் கவனம் செலுத்துகிறான்.
ஒருவன் அலைபேசி வைத்திருந்தால், மற்றவனும் அதனால் ஈர்க்கப்படுவதும் அது போல் வாங்க ஆசைப்படுவதும் அதற்காக எதைச் செய்யவும் தயாராவதும் அப்படியான செய்திகள் இதழ்களில் வரும்போது அதனை இயல்பாய் எடுத்துக் கொள்ளவும் இன்றைய சமூகம் பழகி விட்டது. முதலில் நடக்கும்போது அதிர்ச்சியாக இருப்பது பின்னர் இயல்பாகவும் ஓரிரண்டு நாட்களுக்குப் பேசுவதற்குக் கிடைத்ததாகவும் மாறி விட்டதைக் காலக்கொடுமையென்றுதான் சொல்ல வேண்டும்.
அலைபேசி ஒருவரை உடனுக்குடன் தொடர்பு கொள்ள உதவியாக இருக்கிறது. இதனாலேயே பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பேசிகளை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால், பிள்ளைகள் அதனைப் பேசுவதற்காகப் பயன்படுத்துவதை விடவும் அதில் உள்ள விளையாட்டுகளை ஆடுவதிலும் குறுஞ்செய்தி அனுப்பவுமே மிகுதியும் பயன்படுத்துகிறார்கள். இதனால் கல்விச் செயல்பாடுகள் பாதிப்பதை உணர்ந்தே இன்றைக்குப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அலைபேசி தடை செய்யப்பட்டிருக்கிறது.
அலைபேசியால் போதைப்படுத்தப்படும் ஒரு மாணவன், அது இல்லாமல் இயங்க முடியாதவனாகி விடுகிறான். அலைபேசியை அமைதிப்படுத்தித் தன்னுடனேயே கொண்டு வருகிறான். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் கல்வி நேரங்களிலேயே அதைப் பயன்படுத்துகிறான். சக மாணவர்களையும் அந்தப் போதைக்கு அடிமைப்படுத்துகிறான். அவர்கள் அறியாமலேயே அவர்கள் அடிமைகளாகிறார்கள். தங்கள் காலடிகளைத் தாங்களே எடுத்து வைக்கும் பக்குவமடையாத பதின்பருவ வயதில், தாங்கள் செய்வது இன்னதென்று உணராமலே, தவறுகளைச் செய்து தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அலைபேசியால் சிறைப்படுத்தப்படுபவன், என்ன விலை கொடுத்தேனும் எல்லா நவீன வசதிகளையும் கொண்டதை வாங்க விரும்புகிறான்; மாற்றிக் கொண்டே இருக்கிறான். மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்ற சீனத் தயாரிப்புகளும் 5 ரூபாய்க்குக் கூட ரீசார்ஜ் செய்து அவனிடமிருக்கும் 5 ரூபாயையும் கொள்ளையடிக்கும் நிறுவனங்களும் இதற்கு உதவியாய் இருக்கின்றன. அதில் இருக்கும் சகல வசதிகளையும் அனுபவிக்கத் துடிக்கும் அவனை, அது மேலும் மேலும் தூண்டுகிறது; இறுதியில் இனி எப்போதும் எழுந்துகொள்ள முடியாத படுபாதாளத்தில் அவன் வீழ்ந்து போகிறான்.
தங்கள் கைகளில் இருக்கும் பேசிகளின் வழியே உலகத்தையே தன் முன் விரித்துக் கொள்ளும் இன்றைய மாணவர் சமூகம் அதனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறதா என்பதே இன்றைய மிக முக்கியமான கேள்வி. கணிப்பொறியைக் கூடப் பஞ்சாங்கம் பார்க்கவும் ஜோதிடம் கேட்கவும் பயன்படுத்தும் சமூகத்தின் வழியிலேயே இன்றைய மாணவத் தலைமுறையும் பயணிக்கிறது. யானையைக் காட்டிப் பிச்சை எடுக்கும் சமூகமென்று வருத்தத்துடனே எள்ளல் செய்வார் பிரபஞ்சன். நம் மாணவர்களும் சுற்றியிருக்கும் இயற்கையை, சமூக நிகழ்வுகளை, அழகியல் விஷயங்களை, குழந்தைகளைப் படம் எடுக்காது, தன் கவனத்தை வேறெங்கோ பதித்திருக்கும் சக மாணவிகளை, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பெண்களை வயது வித்தியாசமின்றி ஆபாசமான கோணங்களில் படம் எடுக்கிறார்கள். இணையத்தின் வழியே தரவிறக்கம் செய்து ரசிக்கிறார்கள். இதன் மூலம் உலக இன்பங்களையெல்லாம் அடைந்து விட்டதான மாயையில் மகிழ்வு கொள்கிறார்கள். உண்மையில் தன்னையும் அழித்துக்கொண்டு மாயும் ஆட்கொல்லியாகவே மாறுகிறார்கள்.
இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கும் மாணவன் அதனால் உடல்ரீதியாகத் தூண்டப்படும்போது அவனுக்குப் பலியாகிறவர்கள்? தன் தேவை நிறைவேறாத போது ஏற்படும் ஏமாற்றம், ஆத்திரம்? கல்வியின் மீதான அக்கறை? பாடங்களைக் கவனித்தல்? தொடர்ந்த கல்விச் செயல்பாடுகள்? உளரீதியான சிக்கல்கள்? எதிர்காலம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடம் பதிலிருக்கிறது?
அலைபேசியினால் கவனக்குறைவாகப் பேசியபடி நடந்து நடைபாதையிலிருந்த குழியில் விழுந்த சீன மாணவியொருத்தியை, அவ்வழியாக வந்த நபரொருவர் கவனித்துக் காப்பாற்றிய காட்சியொன்று யூ டியூபில் காணக்கிடைக்கிறது. பேசிக் கொண்டே நடந்தும் சாலையைக் கடந்தும் தண்டவாளத்தில் சிக்கியும் விபத்துகளால் மரணமுறுவதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கவனச்சிதறல், தவறான தூண்டல், கல்வியிலிருந்து துண்டித்தல், ஒழுக்கக் கேடு போன்றவற்றிற்கு அலைபேசிகள் காரணமாக இருக்கின்றன. சக தோழிகளையும் தெய்வமாய் மதிக்கத்தக்க ஆசிரியர்களையும் அவர்களுடைய அனுமதியின்றிப் படம் எடுத்தல், ஆபாசமான, தேவையற்ற பேச்சுகள், குறுஞ்செய்திகள் என அலைபேசி மோகத்தால் சீரழிகிறது மாணவர் கூட்டம்.
கல்வி வளாகத்துள் அனைவரும் சமமென்று வலியுறுத்தவே சீருடை உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய நவீன சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அலைபேசி வடிவத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. சாதாரண பேசி வைத்திருப்பவன், நேற்றைக்கு சந்தைக்கு வந்திறங்கிய நவீன பேசி வைத்திருப்பவன் என இரண்டு வகையாகத் தங்களைப் பிரித்துக்கொண்டு ஏற்றத்தாழ்வைத் தக்கவைத்திருக்கிறார்கள். சாலையைக் கடக்கும்போதும் கூட பேசிக் கொண்டே கடக்கிறார்கள்; அன்றாடப் பணிகளையே தவிர்த்துத் தங்களை அலைபேசிக்கு அடகு வைக்கிறார்கள். அறிவியலாளர்கள் இது உடலுக்கும் ஊறு விளைவிப்பதாகச் சொல்லியும் தள்ளி வைக்க முடியாமல் தள்ளாடுகிறார்கள். இதயத்துக்கும் மூளைக்கும் ஒரு சேரத் துன்பத்தைத் தரும் இந்தக் கருவியை பயன்படுத்த முடியாமல் இருக்க முடியாது என்னும் அளவுக்கு நம் வாழ்வோடு ஒன்றி விட்ட நிலையில் அதை எப்படிக் கவனமாகக் கையாள்வது என்பதைப் பற்றிச் சிந்திப்பதே புத்திசாலித்தனம்.
ஏனெனில் இப்போது அரசு இலவச லேப் டாப்களை வழங்கத் தொடங்கி விட்டது. பள்ளி மாணவர்களுக்குத் தேவையா என்ற கேள்விக்குள் செல்லாமல் இதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகத்தின் ஒவ்வொரு மனிதரும் பொறுப்பேற்றுக்கொண்டு சிலவற்றைச் செய்தாக வேண்டும். அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட பேசிகளைத் தன் குழந்தைகளுக்குப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்; அதையும் அவ்வப்போது மென்மையான முறையில் கண்காணிக்க வேண்டும். சில இணையங்களில் நுழைய முடியாதபடி பூட்டி வைக்கும் வசதியையும் பயன்படுத்தலாம். சார்ந்த உரையாடல்களைக் குழந்தைகளிடம் தொடர்ந்து நிகழ்த்தி மனமாற்றம் ஏற்படுத்துவதே எப்போதைக்குமான பாதுகாவலாக இருக்கும். மாணவர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து அவசர அழைப்புகளுக்கான கருவியாக மட்டும் பயன்படுத்துவதே அவர்களுக்கு நன்மையைச் செய்யும்.
அந்தந்தப் பருவத்தில் பூப்பதே அழகு. அதை விடுத்து இளம் வயதிலேயே தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுத் தங்கள் நலனையும் கெடுத்து அடுத்தவர்க்கும் கேடு விளைக்கும் பார்த்தீனியங்களாய் மாறி விடாமல் பக்குவமாய் வாழ வேண்டும். ஆசிரியர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமையெனினும் சுமையாகக் கருதாமல், அலைபேசியின் தாக்கம் குறித்த கருத்துகளை மாணவர் மனத்தில் விதைத்தபடி இருப்பதும் மீறும்போது கண்டிப்பதும் தேவை. சாலிப் பயிர்களை உற்பத்தி செய்யும் விளைநிலத்தில் என்ன உழைத்து என்ன பயன்? இளங்குற்றவாளிகளை உருவாக்கும் களமாகப் பள்ளிகள் மாறிவிடக் கூடாது. எனவே அரசு இது சார்ந்த சட்டங்களை இயற்ற வேண்டும்; இருக்கும் சட்டங்களையும் கடுமையாக்க வேண்டும்.
No comments:
Post a Comment